நம்மாழ்வார் அருளிச் செய்த பெரிய திருவந்தாதி
குறிப்பு : இரண்டு முறை சேவிக்க வேண்டியவற்றை # என்னும் குறியால் அறியவும்.
தனியன்
எம்பெருமானார் அருளிச் செய்தது
நேரிசை வெண்பா
முந்துற்ற நெஞ்சே* முயற்றி தரித்துரைத்து,
வந்தித்து (*)வாயார வாழ்த்தியே,-சந்த
முருகூருஞ் சோலைசூழ் மொய்பூம் பொருநல்,
குருகூரன் மாறன் பேர்கூறு.

(*) வாயாரவாழ்த்தி என்ற பாடம் வெண்டளைக்குச் சேராது.
பெரிய திருவந்தாதி
2585
முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,
இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடைய
நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப்
பூவின்ற வண்ணன் புகழ்.#
1
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்,
இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம்,மற்
றெங்கள்மால்* செங்கண்மால்* சீறல்நீ, தீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இவை.
2
2587
இவையன்றே நல்ல இவையன்றே தீய,
இவையென் றிவையறிவ னேலும்,-இவையெல்லாம்
என்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே,
என்னால் செயற்பால தென்?
3
2588
என்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற்
றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்,-என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப்
பெருஞ்சோதிக் கென்னெஞ்சாட் பெற்று?
4
2589
பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ,
மற்றையா ராவாரும் நீபேசில்,-எற்றேயோ
மாய*மா மாயவளை மாயமுலை வாய்வைத்த,
நீயம்மா* காட்டும் நெறி.
5
2590
நெறிகாட்டி நீக்குதியோ, நின்பால் கருமா
முறிமேனி காட்டுதியோ, மேனாள்-அறியோமை
என்செய்வா னெண்ணினாய் கண்ணனே, ஈதுரையாய்
என்செய்தா லென்படோம் யாம்?
6
2591
'யாமே அருவினையோம் சேயோம்,' என் நெஞ்சினார்
தாமே யணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,-பூமேய
செம்மாதை நின்மார்வில் சேர்வித்து, பாடரிந்த
அம்மா*நின் பாதத் தருகு.
7
2592
அருகும் சுவடும் தெரிவுணரோம், அன்பே
பெருகும் மிகவிதுவென்? பேசீர்,-பருகலாம்
பண்புடையீர்* பாரளந்தீர்* பாவியேம்கண் காண்பரிய,
நுண்புடையீர்* நும்மை நுமக்கு.
8
2593
'நுமக்கடியோம்' என்றென்று நொந்துரைத்தென், மாலார்
தமக்கவர்தாம் சார்வரிய ரானால்?-எமக்கினி
யாதானு மாகிடுகாண் நெஞ்சே, அவர்திறத்தே
யாதானும் சிந்தித் திரு.
9
2594
இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ
டொருநால்வர் ஓரிருவர் அல்லால்,-திருமாற்கு
யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே,
நாமா மிகவுடையோம் தாழ்?
10
2595
நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை,
வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாத
பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ,
நீரும்நீ யாய்நின்ற நீ.
11
2596
நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்?,
போயொன்று சொல்லியென்?போநெஞ்சே,-நீயென்றும்
காழ்த்துபதே சம்தரினும் கைக்கொள்ளாய், கண்ணன்தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு.
12
2597
வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட,
இழக்கவும் காண்டும் இறைவ*-இழப்புண்டே,
எம்மாட்கொண் டாகிலும் யான்வேண்ட, என்கண்கள்
தம்மால்காட் டுன்மேனிச் சாய்?
13
2598
சாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே,
பேயார் முலைகொடுத்தார் பேயராய்,-நீயார்போய்த்
தேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும், தீவினையாம்
பாம்பார்வாய்க் கைநீட்டல் பார்த்து.
14
2599
பார்த்தோர் எதிரிதா நெஞ்சே, படுதுயரம்
பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை,-ஆர்த்தோதம்
தம்மேனி தாள்தடவத் தாங்கிடந்து, தம்முடைய
செம்மேனிக் கண்வளர்வார் சீர்.
15
2600
சீரால் பிறந்து சிறப்பால் வளராது,
பேர்வாம னாகாக்கால் பேராளா,-மார்பாரப்
புல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே?,
சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து.
16
2601
சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,-சூழ்ந்தெங்கும்
வாள்வரைகள் போலரக்கன் வன்தலைகள் தாமிடிய,
தாள்வரையில் லேந்தினார் தாம்.
17
2602
தாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக,
பாம்பாலாப் புண்டுபா டுற்றாலும்,-சோம்பாதிப்
பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா,உன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு?
18
2603
சொல்லில் குறையில்லைச் சூதறியா நெஞ்சமே,
எல்லி பகலென்னா தெப்போதும்,-தொல்லைக்கண்
மாத்தானைக் கெல்லாமோர் ஐவரையே மாறாக,
காத்தானைக் காண்டும்நீ காண்.
19
2604
காணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்,
நாணப் படுமன்றே நாம்பேசில்?-மாணி
உருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்,
திருவாகம் தீண்டிற்றுச் சென்று.
20
2605
சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,
இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்ட,-அன்றங்குப்
பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய,
காருருவன் தான்நிமிர்த்த கால்.
21
2606
காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள்,
மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே,-மேலால்
தருக்குமிடம் பாட்டினொடும் வல்வினையார் தாம்,வீற்
றிருக்குமிடம் காணா திளைத்து.
22
2607
இளைப்பா யிளைபாப்பாய் நெஞ்சமே* சொன்னேன்,
இளைக்க நமன்தமர்கள் பற்றி-இளைப்பெய்த
நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்,
தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான்.
23
2608
தானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான்,
தானே பிறர்கட்கும் தற்றோன்றல்,-தானே
இளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்டமைப்பா னானால்,
அளக்கிற்பார் பாரின்மேல் ஆர்?
24
2609
ஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை
ஆராய்ந் ததுதிருத்த லாவதே?-சீரார்
மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன், வானோர்
இனத்தலைவன் கண்ணனால் யான்.
25
2610
யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக்
கானும் மலையும் புகக்கடிவான்,-தானோர்
இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த,
அருளென்னும் தண்டால் அடித்து.
26
2611
அடியால் படிகடந்த முத்தோ,அ தன்றேல்
முடியால் விசும்பளந்த முத்தோ,-நெடியாய்*
செறிகழல்கள் தாள்நிமிர்த்துச் சென்றுலக மெல்லாம்,
அறிகிலமால் நீயளந்த அன்று.
27
2612
அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்,
இன்றேநாம் காணா திருப்பதுவும்,-என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும்
உட்கண்ணேல் காணு முணர்ந்து.
28
2613
உணர ஒருவர்க் கெளியனே? செவ்வே,
இணரும் துழாயலங்கல் எந்தை,-உணரத்
தனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால்,
எனக்கெளியன் எம்பெருமான் இங்கு.
29
2614
இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய
செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்,-அங்கே
மடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம்,மீண்
டடியெடுப்ப தன்றோ அழகு?
30
2615
அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான்,
நிழலும் அடிதாறும் ஆனோம்,-சுழலக்
குடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத்
தடங்கடலை மேயார் தமக்கு.
31
2616
தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார்,
தமக்கடிமை செய்யென்றால் செய்யாது,-எமக்கென்று
தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்,
யான்செய்வ திவ்விடத்திங் கியாது?
32
2617
யாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ,
யாதானும் நேர்ந்தணுகா வாறுதான்?,-யாதானும்
தேறுமா செய்யா அசுரர்களை, நேமியால்
பாறுபா றாக்கினார் பால்.
33
2618
பாலாழி நீகிடக்கும் பண்பை,யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச்
சோதியாய்* ஆதியாய்* தொல்வினையெம் பால்கடியும்,
நீதியாய்* நிற்சார்ந்து நின்று.
34
2619
நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்,
ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்,-அன்றங்கை
வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார்விடந்தான்,
அன்புடைய னன்றே யவன்?
35
2620
அவனாம் இவனாம் உவனாம்,மற் றும்பர்
அவனாம் அவனென் றிராதே,-அவளும்
அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்,
அவனே எவனேலும் ஆம்.
36
2621
ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே?
நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே,-பூமேய்
மதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம்
அதுகரமே அன்பால் அமை.
37
2622
அமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே,
இமைக்கும் பொழுதும் இடைச்சி-குமைத்திறங்கள்,
ஏசியே யாயினும் ஈ.ன்துழாய் மாயனையே,
பேசியே போக்காய் பிழை.
38
2623
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே* பேசாய்,
தழைக்கும் துழாய்மார்வன் றன்னை,-அழைத்தொருகால்
போயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன்புகழே
வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு?
39
2624
வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே,
போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்,-தீப்பால
பேய்த்தாய் உயிர்கலாய்ப் பாலுண்டு, அவளுயிரை
மாய்த்தானை வாழ்த்தே வலி.
40
2625
'வலியம்' எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர்,
வலிய முடியிடிய வாங்கி,-வலியநின்
பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே,
பன்னாளும் நிற்குமிப் பார்.
41
2626
பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்,
பாரிடம் முன்படைத்தா னென்பரால்,-பாரிடம்
ஆவானும் தானானா லாரிடமே? மற்றொருவர்க்கு
ஆவான் புகாவால் அவை.
42
2627
அவய மெனநினைந்து வந்தசுரர் பாலே,
நவையை நளிர்விப்பான் றன்னை,-கவையில்
மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ
மனத்துயரை மாய்க்கும் வகை?
43
2628
வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும்,
மிகவாய்ந்து வீழா எனிலும்,-மிகவாய்ந்து
மாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே,
மேலைத்தாம் செய்யும் வினை?
44
2629
வினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி,
தினையாம் சிறிதளவும் செல்ல-நினையாது,
வாசகத்தா லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும்,
நாயகத்தான் பொன்னடிகள் நான்.
45
2630
நான்கூறும் கூற்றாவ தித்தனையே, நாணாளும்
தேங்கோத நீருருவன் செங்கண்மால்,-நீங்காத
மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,
நீகதியா நெஞ்சே* நினை.
46
2631
நினைத்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே,
நினைத்திடவும் வேண்டாநீ நேரே,-நினைத்திறைஞ்ச
எவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே, அதுதானும்
எவ்வளவு முண்டோ எமக்கு?
47
2632
எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை,
அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு,-அமைப்பொலிந்த
மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே,
கொன்றானை யேமனத்துக் கொண்டு?
48
2633
கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்
வண்டறாப் பூவைதான் மற்றுத்தான்,-கண்டநாள்
காருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார்
பேருருவென் றெம்மைப் பிரிந்து.
49
2634
பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே,
திரிந்துழலும் சிந்தனையார் தம்மை,-புரிந்தொருகால்
'ஆவா*' எனவிரங்கார் அந்தோ* வலிதேகொல்,
மாவாய் பிளந்தார் மனம்?
50
2635
மனமாளும் ஓரைவர் வன்குறும்பர் தம்மை,
சினமாள்வித் தோரிடத்தே சேர்த்து-புனமேய
தண்டுழா யானடியே தான்காணும் அஃதன்றே,
வண்டுழாம் சீரார்க்கு மாண்பு?
51
2636
மாண்பாவித் தந்நான்று மண்ணிரந்தான், மாயவள்நஞ்
சூண்பாவித் துண்டான தோருருவம்,-காண்பான்நங்
கண்ணவா மற்றொன்று காணுறா, சீர்பரவா
துண்ணவாய் தானுறுமோ ஒன்று?
52
2637
ஒன்றுண்டு செங்கன்மால்* யானுரைப்பது, உன்னடியார்க்
கென்செய்வ னென்றே யிருத்திநீ,-நின்புகழில்
வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு
வைகுந்த மென்றருளும் வான்?
53
2638
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமே,
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால்,-ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,
வன்துயரை யாவா* மருங்கு.
54
2639
மருங்கோத மோதும் மணிநா கணையார்,
மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங்கே
எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால்,
மனக்கவலை தீர்ப்பார் வரவு.
55
2640
வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே*
ஒருவா றொருவன் புகாவாறு,-உருமாறும்
ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம்,
மாயவர்தாம் காட்டும் வழி.
56
2641
வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே,
தழிஇக்கொண்டு போரவுணன் றன்னை,-சுழித்தெங்கும்
தாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தானுகள,
வாழ்வடங்க மார்விடந்த மால்?
57
2642
மாலே* படிச்சோதி மாற்றேல், இனியுனது
பாலேபோல் சீரில் பழுத்தொழிந்தேன்,-மேலால்
பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றவே லன்று,
மறப்பின்மை யான்வேண்டும் மாடு.
58
2643
மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார்
காடானும் ஆதானும் கைக்கொள்ளார்,-ஊடேபோய்ப்
பேரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து.
59
2644
பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே,-பேர்ந்தெங்கும்
தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,
இல்லைகாண் மற்றோர் இறை.
60
2645
இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள்,
மறைமுறையால் வானாடர் கூடி,-முறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின்
மீதிலகித் தான்கிடக்கும் மீன்?
61
2646
மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய்,
வானென்னும் கேடிலா வான்குடைக்கு,-தானோர்
மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான், நங்கள்
பிணிக்காம் பெருமருந்து பின்.
62
2647
பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும்போய்,
வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே,-அன்று
திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும்,
பருச்செவியு மீர்ந்த பரன்.
63
2648
பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில்,
உரனா லொருமூன்று போதும்,-மரமேழன்
றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானை யே,அமரர்
கைதான் தொழாவே கலந்து?
64
2649
கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே,
மலங்க அடித்து மடிப்பான்,-விலங்கல்போல்
தொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை,
சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு.
65
2650
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை,
மாட்டே துயரிழைத்த மாயவனை,-ஈட்ட
வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே*
அறிகண்டாய் சொன்னேன் அது.
66
2651
அதுவோநன் றென்றங் கமருலகோ வேண்டில்,
அதுவோ பொருளில்லை யன்றே?,-அதுவொழிந்து
மண்ணின்றாள் வேனெனிலும் கூடும் மடநெஞ்சே,
கண்ணன்தாள் வாழ்த்துவதே கல்.
67
2652
கல்லும் கனைகடலும் வைகுந்த வானோடும்,
புல்லென் றொழிந்தனகொல் ஏபாவம்,- வெல்ல
நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான்,
அடியேன துள்ளத் தகம்.
68
2653
அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார்,
முகம்சிதைவ ராமன்றே முக்கி,-மிகுந்திருமால்
சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை,
ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து?
69
2654
அடர்பொன் முடியானை யாயிரம்பே ரானை,
சுடர்கொள் சுடராழி யானை,-இடர்கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே,
யாதாகில் யாதே இனி?
70
2655
இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே,
தனிநின்ற சார்விலா மூர்த்தி,-பனிநீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு
முகத்தான்நின் உந்தி முதல்.
71
2656
முதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே
முதலாகும் மூன்றுக்கு மென்பர்-முதல்வா,
நிகரிலகு காருருவா* நின்னகத்த தன்றே,
புகரிலகு தாமரையின் பூ?
72
2657
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற,
காவி மலரென்றும் காண்தோறும்,-பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.
73
2658
என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால்,
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,-குன்று
குடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே*
புடைதான் பெரிதே புவி.
74
2659
புவியும் இருவிசும்பும் நின்னகத்த, நீயென்
செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,-அவிவின்றி
யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்,
ஊன்பருகு நேமியாய்* உள்ளு.
75
2660
உள்ளிலும் உள்ளந் தடிக்கும் வினைப்படலம்,
விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்,-உள்ள
உலகளவு யானும் உளனாவன் என்கொல்,
உலகளந்த மூர்த்தி* உரை.
76
2661
உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே,
இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர்
சொல்நன்றி யாகும் துணை.
77
2662
துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும், சுற்றத்
திணைநாளு மின்புடைத்தா மேலும்,-கணைநாணில்
ஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே,
ஓவாத வூணாக உண்.
78
2663
உண்ணாட்டுத் தேசன்றே* ஊழ்வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே,-மண்ணாட்டில்
ஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப்
பேராயற் காளாம் பிறப்பு?
79
2664
பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து, பின்னும்
இறக்கவும் இன்புடைத்தா மேலும்,-மறப்பெல்லாம்
ஏதமே யென்றல்லால் எண்ணுவனே, மண்ணளந்தான்
பாதமே யேத்தப் பகல்?
80
2665
பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை
இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,-தகவாத்
'தொழும்பர்இவர்; சீர்க்கும் துணையிலர்'என் றோரார்,
செழும்பரவை மேயார் தெரிந்து.
81
2666
தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன், வாளா
இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில்
அம்மானை அந்நான்று பின்தொடர்ந்த ஆழியங்கை
அம்மானை யேத்தா தயர்த்து.
82
2667
அயர்ப்பாய் அயராப்பாய் நெஞ்சமே* சொன்னேன்,
உயப்போம் நெறியிதுவே கண்டாய்,-செயற்பால
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே* அஞ்சினேன்,
மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.
83
2668
வாழ்த்தி அவனடியைப் பூப்புனைந்து, நின்தலையைத்
தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி,
எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே,
தங்கத்தா னாமேலும் தங்கு.
84
2669
தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,
எங்கேபுக் கெத்தவம்செய் திட்டனகொல்,-பொங்கோதத்
தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய
கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்?
85
2670
கார்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்,
பார்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,-சீர்கலந்த
சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை,
என்நினைந்து போக்குவரிப் போது?#
86
2671
இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்,
எப்போது மீதேசொல் என்னெஞ்சே,-எப்போதும்
கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்,
மொய்கழலே யேத்த முயல்.#
87
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com